Saturday, January 04, 2014

ரோஜா செடிகள் அழகாக மலர பராமரிப்பு முக்கியம்.....



பூஞ்செடிகள் வளர்ப்பவர்கள் வீட்டில் பெரும்பாலும் ரோஜா செடிகள் இல்லாமல் இருக்காது. எத்தனை அழகு செடி    களைகொண்டு மலர் தோட்டத்தை உருவாக்கி இருந்தாலும் வீட்டையும், கூந்தலையும் அலங்கரிக்கும் ரோஜா செடிகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அவர்கள் மனதை கவருவதற்காகவே வண்ண வண்ண நிறங்களில் பூக்கும் ரோஜா செடிகள் நர்சரி கார்டன்களில் கிடைக்கின்றன. அவைகள் வீட்டு தோட்டத்தில் மலர்ந்து விதவிதமான வண்ணங்களில் காட்சி தரும் அழகே தனி தான்.
இருப்பினும் ரோஜா செடிகளை வளர்த்து பராமரிப்பது என்பது எளிதான விஷயம் அல்ல. மனதை மயக்கும் ரோஜா மலர்கள் செழிப்பாக வளர்ந்து பூத்து குலுங்கும் அழகை காண்பதற்கு அதிகம் மெனக்கெட வேண்டியது இருக்கும். அவைகளை பராமரிப்பதை பொறுத்தே அதன் அழகு குறைபடாமல் காட்சி தரும். முறையாக பராமரிக்காவிட்டால் வளர்க்க தொடங்கிய சில நாட்களில் இலைகள் வறண்டு உதிர்ந்து போய் பரிதாபமாக காட்சி அளிக்க தொடங்கி விடும். அல்லது எதிர்பார்த்த வளர்ச்சி இல்லாமல் பூக்கள் அடுத்தடுத்து மலர்வதில் தாமதம் ஏற்படும். இந்த பிரச்சினைகளை தவிர்க்க ரோஜா செடிகளை வளர்க்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் சிலவற்றை பார்ப்போம்.
* ரோஜா செடியை வளர்க்கும் தொட்டியின் அடியில் செம்மண் கலவை, இயற்கை உர எருக்கலவையை நிரப்ப வேண்டும். அதன்பின் மண் கலவைக்கு நடுவில் செடியை நடவு செய்து மண்ணை அணைக்க வேண்டும்.
* செடியின் வேர்களை நன்றாக சுத்தம் செய்தால் புதிய மண்ணை ஏற்றுக்கொள்வதற்கும், வேர் வளர்ச்சி அடைவதற்கும் உதவியாக இருக்கும்.
* தொட்டியில் மண், இயற்கை எரு கலவையை அடுத்தடுத்து மாறி மாறி நிரப்புவது செடியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். தொட்டியில் பாதி மண் கலவை நிரப்பியவுடன் தண்ணீர் ஊற்ற வேண்டும். அது நன்கு உறிஞ்சப்பட்ட பிறகு மண், இயற்கை எரு கலவையை தொட்டி முழுவதும் நிரப்புவது நல்லது.
* தொட்டியில் தேங்கி நிற்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றக்கூடாது. மண் உலர்ந்து போகாத அளவிற்கு தண்ணீர் விட வேண்டும். அதிலும் அடிப்பரப்பில் இருக்கும் மண் உலர்ந்து போகும் நிலையை அடையும் போது தான் தண்ணீர் அதிகமாக ஊற்ற வேண்டும். தினமும் தண்ணீர் ஊற்றவேண்டும் என்று கட்டாயம் இல்லை. மண்ணில் இருக்கும் ஈரப்பதத்தை கவனித்து தான் தண்ணீர் விட வேண்டும். ரோஜா செடியின் மீதும் சிறிதளவு நீர் தெளிக்கலாம்.
* ரோஜா செடிகள் பூச்சிகளின் பாதிப்புக்கு உட்படாமல் இருக்க இயற்கை பூச்சிகொல்லி மருந்துகளை தெளிக்க வேண்டும். சோப்பு தண்ணீரை தெளித்தால் கூட பூச்சிகள் செடியை அண்டாது.
* செடியில் இருக்கும் இலைகள் அழுகும் நிலையில் இருந்தாலோ, நிறம் மாற தொடங்கினாலோ அது உதிரும் வரை காத்திராமல் இலைகளை நீக்கிவிட வேண்டும்.
* ரோஜா செடிகளுக்கு சூரிய வெளிச்சம் மிக அவசியம். தினமும் 6 மணி நேரமாவது செடியில் சூரிய ஒளி படும்படி பார்த்து கொள்வது நல்லது. செடிகளுக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்குமாறும் பார்த்துக்கொள்ள வேண்டும். தொட்டிகளுக்கு இடையே போதிய இடைவெளியும் இருக்க வேண்டும்.
* அதேநேரத்தில் ஈரப்பதம் அதிகம் இல்லாத இடத்தில் தொட்டிகளை வைப்பது நல்லது. அதிலும் குளிர்காலத்தில் கூடுதல் பராமரிப்பு அவசியம்.
* குளிர்காற்று ரோஜா செடிகள் மீது படாத இடத்தில் தொட்டிகளை வைக்க வேண்டும். காற்று வரும் திசையில் தொட்டிகளையொட்டி அடைப்புகளை வைத்தும் செடிகளை பாதுகாக்கலாம். மேல்பகுதி சூரிய வெளிச்சம் படும் படி திறந்திருக்க வேண்டும்.
* குளிர்காலத்தில் ரோஜா செடிகள் வேகமாக வறண்டு நீர் பற்றாக்குறையை சந்திக்கும். ஆகவே சீரான இடைவெளியில் தண்ணீர் ஊற்றி வர வேண்டும். அதற்காக வேர் வரை நீர் ஊருவிச்செல்லும் வகையில் தண்ணீர் ஊற்ற தேவையில்லை. மண் மிதமான ஈரப்பதத்துடன் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
* தொட்டிக்குள் தூசிகள், உதிர்ந்த இலை காம்புகள் இல்லாதவாறு அப்புறப்படுத்த வேண்டும். அது பூச்சிகள் செடியை ஆக்கிரமிப்பதை தடுக்க உதவும்.
* குளிரின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் சமயம் ரோஜா செடிகள் வெகுவாக பாதிக்கப்படும். அந்தநேரத்தில் தொட்டிகளை வீட்டுக்குள் வைத்து வளர்க்கலாம். அங்கு மிதமான வெப்ப சூழல் நிலவுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஜன்னல் ஓரம் சூரிய வெளிச்சம் படும் இடத்தில் வைக்கலாம். அப்படி வைக்கும்போது குளிர் காற்று ரோஜா செடிகளை தாக்காமல் இருக்குமாறு பாதுகாக்க வேண்டும்.
Gratitude : dinathanthi